ஒப்பனைகள் இல்லாத உலக மகளிர் உரிமை நாள் – எந்நாளோ?

தமிழர் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!

இன்று (8.3.2017) உலக மகளிர் நாள்!

ஆணுக்கு நிகர் பெண்குலத்துக்குப் பெருமைமிகு வாழ்த்துகள்!

மகளிர் உரிமைகள் எங்கும் முழுமையாக கிட்டவில்லை.

காரணம் ஆணாதிக்க மனப்பான்மையின் அகம்பாவம் – ஆளுமையே!

இந்தியத் திரு நாடு ஞான பூமியாம்! புராதன கலாச்சாரத்தில் பூத்த பூமியாம்!

இங்கே என்ன வாழுது?

சரி பகுதியான மானிடம் – மகளிர் குலம் – இன்னமும் ‘‘பிறக்கும் உரிமை’’யைக்கூட பெறவில்லையே!

ஆம்; பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து ‘காலி’ செய்த பழைய முறை விடைபெற்று, கருவிலேயே கண்டறிந்து அதை அழிக்கும் அதிநவீன தொழில்நுட்பம் – இந்த அற்பத்தனத்திற்கு!

இதுதான் இச்சமூகத்தின் மகளிர் உரிமைக்கான வளர்ச்சியா?

குழந்தை பெறுவதற்கோ, தேவையில்லை எனக் கூறுவதற்கோ, எந்தத் திருமணமான பெண்ணுக்கும் வாய்ப்பு உண்டா? இல்லையே!

‘மலடி’கள் என்ற அவமானத்திலிருந்து விடுபட ஆங்காங்கே புற்றீசல்களைப்போல  ‘‘கருத்தரிப்பு மய்யங்கள்.’’  (‘பாவம், பிரம்மா’ ஏமாந்து கைபிசைந்து நிற்கிறார்! குழந்தை பெறுவதும், தடுப்பதும் இப்போது அவரது அதிகார எல்லையில் இல்லையே!)

படித்து, பணிபுரியச் செல்லும் பாவையருக்குப் பொருளாதாரச் சுதந்திரம் – அவர் வாங்கும் ஊதியத்தினை செலவழிக்க உரிமை உண்டா? இல்லையே!

இடையில் வந்து எஜமானான கணவனும், அவனது வீடும் அல்லவா அப்பாவையின் சம்பளத்தின் ‘பட்ஜெட்’ போடும் அதிகாரிகள்!

‘கற்பு’ என்ற ஒருதலை அதிகாரத்தால் தறுதலை ஆண்களின் தலைதுள்ளலுக்குத் தடைதான் ஏது?

வாய் விட்டுச் சிரித்தால்

நோய் விட்டுப் போகும் என்பதுகூட யாருக்கு –

ஆண் உலகத்திற்குத்தானோ? இன்றேல்

‘பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சா போச்சு!’ என்றா கூறுவர்?

– இப்படி பற்பல கொடுமைகள்! நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு ‘இலவு காத்த கிளியின் நிலை’தானே!

சிறகை வெட்டிவிட்டு பறக்கச் சொல்லும் பறவைகளைப் போன்ற சு-தந்தரம் – இப்போது நீங்கள் பெற்றுள்ள சுதந்தரம்!

பெண்கள் வெறும் பாலினப் பண்டங்களா? மனிதர்கள் அல்லவா அவர்கள் என்று கேட்ட பெரியாரின் கேள்விக்கு விடைதான் எங்கே?

அடுப்பூதியவர்களை படிப்பெய்தச் செய்தோம்! ஆனால்…?

பட்டங்கள் ஆளுவதும், சட்டங்கள் செய்வதும் மட்டுமா அவர்களது  பணி?  சமையல் அறையும் அவர்களது படிதாண்டா ராஜ்யம் அல்லவோ?

வேலைக்குப் போய்திரும்பிய பின்னர் ‘இரண்டாவது ஷிப்ட்’ சமையல் அறையில்தானே!

அதற்கும் பிறகு ‘மூன்றாவது ஷிப்ட்டும்‘ கட்டாயம்;  இன்றேல், அரிவாளோ, கொடுவாளோ! புதிய நளாயினிகளாக இங்கே நாரிமணிகளுக்குத்தான் பதிவிரதை பட்டம்!

எல்லாம் அவாள் தர்மம்; மனுதர்மம்!

அம்மனுதர்மம் பொசுங்கட்டும்!

மனித தர்மம் உண்மையில் மலரட்டும்!

ஒப்பனைகள் இல்லாத உலக மகளிர் உரிமை நாள் – எந்நாளோ?

அந்நாளே உண்மை விடுதலை நாள்!

பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணே,

உன் விடுதலை, உனது உரிமைச் சாசனம்

பிறரால் தரப்படுவதில்லை; உன்னால்

தட்டிப் பறித்து தக்க வைப்பதன்மூலமே சாத்தியம்;

இல்லையேல், பழைய சாத்திரச் சதியே!

எனவே, களம் காண வா? பலம் காட்டவா?

இன்றேல், மீள்வாழ்வு வெறும் கனவுதான்!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

8.3.2017
சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *